×

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மே 10 வரை நிறுத்தி வைக்க அறிவுறுத்தி இருக்கிறோம்: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை: வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மே 10ம் தேதி வரை நிறுத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. கடலூர் வள்ளலார் சத்ய ஞான சபை முன் அமைந்திருக்கக்கூடிய பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கக்கூடிய நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 106 ஏக்கர் பெருவெளி நிலம் வள்ளலாருக்கு சொந்தமானது.

150 ஆண்டு புராதான பகுதியான இங்கே எந்தவொரு கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது என்று வாதிட்டார். புராதான சின்ன ஆணையத்தின் ஒப்புதலை அரசு பெறவில்லை என்றும் அந்த பகுதியில் எந்தவொரு கட்டுமானமும் மேற்கொள்ள பக்தர்கள் விரும்பவில்லை என்றும் தற்போது அந்த பகுதியில் ஆய்வு செய்யும் மாநில தொல்லியல்துறை அதிகாரிகள் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால் மத்திய தொல்லியத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், வள்ளலார் சர்வதேச மையம் பிரதான கோயிலுக்கு அருகில் அமையவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக 99.90 கோடி ரூபாய் அரசு செலவில் 500 பேர் அமரும் வகையில் தியான மண்டபம், தர்மசாலை புதுப்பிப்பு, டிஜிட்டல் உலகம், கழிவறை, சாலை வசதி, பக்தர்கள் தங்குமிடம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும், இந்த சொத்து கோயிலுக்கு சொந்தமானதாக இருக்கும் என்றும் விளக்கினார். மேலும், பெருவெளி பகுதியான 71 ஏக்கரில் 3 ஏக்கர் பரப்பில் மட்டுமே கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பெருவெளியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில்தான் கட்டுமானம் நடைபெறுகிறது. தொல்லியல் துறை ஆய்வில் தொன்மையான படிமங்கள் கிடைத்ததினால் அந்த பகுதியில் கட்டுமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த பகுதியில், தொல்லியல் துறை நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தொன்மையான கட்டுமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அது பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார். வழக்கை தொடர்ந்தவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் என்றும் அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இதையடுத்து நிபுணர் குழு அறிக்கை அளிக்க 3, 4 வாரங்கள் ஆகலாம் என்பதினால் கட்டுமான பணிகளை ஏன் நிறுத்திவைக்கக்கூடாது என அரசு தரப்புக்கு நீதிபதிகள் கேட்டபோது, பணிகளை நிறுத்தி வைக்க அறிவுறுத்தி இருப்பதாக உறுதி அளித்தார். மேலும் இந்த வழக்கில் ஒரு சிறப்பு வழக்காக கோடை விடுமுறையன்று வரும் 10ம் தேதி முழுமையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றும் சிறப்பு அமர்வு 10ம் தேதி விசாரிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்ததன் காரணமாக வழக்கு விசாரணை மே 10ம் தேதியன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று வழக்கின் முழுமையான விசாரணை நடைபெறும்.

The post வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மே 10 வரை நிறுத்தி வைக்க அறிவுறுத்தி இருக்கிறோம்: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Vallalar ,International Center ,Tamil Nadu Government ,ICourt ,Chennai ,Peruveli ,Sathya Gnana Sabha ,Cuddalore ,Dinakaran ,
× RELATED வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும்...